வங்கிக்கு பணம் கொண்டு செல்லும் போது ஆவணம் தேவை

திருப்பூர், மார்ச் 6: திருப்பூரில் வங்கிக்கு பணம் கொண்டு செல்லும் போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் விஜயகார்த்திகேயன்  நேற்று தெரிவித்தார். திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தமிழக சட்டமன்ற பொது தேர்தல்-2021 தொடர்பாக வங்கியாளர்களுக்கான தேர்தல் தொடர்பான அறிவுரைகள் குறித்த கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருமான விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இதில், கலெக்டர் பேசியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்திடவும் தேர்தல் பிரச்சாரத்தின்போது சமமான, ஆரோக்கியமான போட்டியிடும் சூழலை அனைத்து வேட்பாளர்களுக்கிடையே உருவாக்கிடவும், பணம்/பொருட்கள் மூலமாக வாக்காளர்களுக்கிடையே தேவையற்ற செல்வாக்கினை செலுத்துவதை தடுத்திடவும் பல்வேறு அறிவுரைகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் நடைமுறையின் போது தனிநபரின் வங்கிக் கணக்கில் இருந்தும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கடந்த இரண்டு மாதங்களில் வைப்பீடு செய்யாமல் தொகையைத் திரும்பப் பெறாமல், ஒரு வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 1 லட்சத்திற்கும் மேற்பட்டு ரொக்கத்தை திரும்ப பெறுவது அல்லது ரொக்கத்தை வைப்பீடு செய்வது தொடர்பாக அறிக்கை பெற வேண்டும்.

தேர்தல் நடைமுறையின் போது ஒரு மாவட்டத்தில், தொகுதியில் ஆர்.டி.ஜி.எஸ் மூலம் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து பல நபர்களின் கணக்குகளில் தொகையை வழக்கத்திற்கு மாறாக மாற்றுதல் (இதற்கு முன் அவ்வாறு மாற்றாமல் இருந்து தற்போது மாற்றுதல்). வேட்பாளர் அல்லது அவரது மனைவி அல்லது அவரை சார்ந்திருப்பவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 1 லட்சத்திற்கு மேற்பட்ட ஏதேனும் ரொக்கத்தை வைப்பீடு செய்தல் அல்லது ரொக்கத்தை திரும்ப பெறுதல். வாக்காளர்களுக்கு கையூட்டு அளிப்பதற்காக பயன்படுத்தப்படக் கூடிய ஏனைய சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் மற்றும் வாங்கல். ரூபாய் 10 லட்சத்திற்கு மேற்பட்ட தொகை திரும்பப் பெறப்பட்டது பற்றிய தகவலை, மாவட்ட தேர்தல் அதிகாரி, வருமானவரி சட்டங்களின் கீழ் தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக, வருமானவரித்துறை ஒருங்கிணைப்பு அதிகாரிக்கு (வருமானவரித்துறை தலைமை இயக்குநர் (புலனாய்வு) அலுவலகம்) அல்லது வருமானவரித்துறை உதவி இயக்குநருக்கு துணை இயக்குநருக்கு தெரிவிக்க வேண்டும்.  பணத்தினை எடுத்துச் செல்லும் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களில் பயணம் செய்யும் பணியாளர்கள் தகுந்த அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.  மேலும் பணம் வங்கிகளின் ஏடிஎம்-இல் டெபாசிட் செய்ய அல்லது பிற கிளைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கான ரசீதினை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்ஸ்சாண்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>