80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு படிவம் 12 டி வழங்குவது குறித்த பயிற்சி துவக்கம்

ஊட்டி,மார்ச்6: 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு படிவம் 12 டி வழங்குவது மற்றும் தேர்தல் வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக அதிகாரிகளுக்கு பயிற்சி  வழங்கப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு ஊட்டி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு படிவம் 12 டி வழங்குவது மற்றும் தேர்தல் வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான பயிற்சி நடந்து. பயிற்சியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்து பேசியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலில் வாக்குச்சாவடிக்கு வருகை தந்து வாக்களிக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளது.  

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் விருப்பத்தின் அடிப்படையில் நேரடியாக வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில், ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 1865 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட 3136 வாக்காளர்கள் உள்ளனர். ஊட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு படிவம்  12டி வழங்குவது தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். மேலும், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும், என்றார். இதில் ஊட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சப் கலெக்டர் மோனிகாரானா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குப்புராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Related Stories: