மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதால் தேர்தல் பாதுகாப்பு பணி குறித்து ஊட்டியில் ஆலோசனை கூட்டம்

ஊட்டி, மார்ச் 6: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்பட்டுவிடாமல் எல்லையோர பகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக 3 மாநில எல்லையோர மாவட்டங்களின் கலெக்டர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஊட்டி நடந்தது. தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தின் நீலகிரி, கேரளாவின் வயநாடு, மலப்புரம் மற்றும் கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஆகியவை மூன்று மாநில எல்லையோரங்களில் அமைந்துள்ளது. கேரள, கர்நாடகா மாநில வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருந்து வருகிறது.தேர்தல் சமயங்கள் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்பட்டுவிடாமல் எல்லையோர பகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக எல்லையோர மாவட்டங்களின் கலெக்டர்கள், எஸ்பி.,க்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் நடந்தது.இதில் நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா,எஸ்பி பாண்டியராஜன், வயநாடு  கலெக்டர் அதில்லா அப்துல்லா, எஸ்பி., அரவிந்த் சுகுமார், மலப்புரம் கலெக்டர் கோபாலகிருஷ்ணன், எஸ்பி சுஜித் தாஸ், சாம்ராஜ்நகர் துணை ஆணையர் ரவி மற்றும் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் எல்லையோர சோதனை சாவடிகளான, நாடுகாணி, தாளூர், கக்கநல்லா, பாட்டவயல்,  பர்லியார், குஞ்சப்பனை, நம்பியார் குன்னு, மதுவந்தாள், சோலாடி, கக்குண்டி, மணல் வயல், கோட்டூர், ஓவேலி, மானார் உள்ளிட்ட 18 சோதனை சாவடிகளில் ஆய்வு தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. தேர்தல் பரிசுப்பொருட்கள் பரிமாற்றம், பணம், மதுபாட்டில் எடுத்து செல்வதை தடுக்கும் நோக்கத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு குறித்து அலுவலர்கள் விவாதித்தனர்.

அதிக எண்ணிக்கையிலான பொருட்களை வாங்குவோர் விவரங்களை பகிர்தல், சந்தேகத்துக்கு இடமான வகையில் எல்லையில் கடந்து செல்லும் வாகனங்கள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பரிமாறுதல் பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது.  சோதனை சாவடிகள் மட்டுமின்றி எல்லை கடந்து செல்லும் அனைத்து வழிகளையும் கண்காணிப்பது  பற்றியும் ஆலோசித்தனர். 3 மாநிலங்களிலும் மதுபான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்கவும், அந்தந்த மாநில எல்லையோர காவல் அலுவலர்கள் ஒருங்கிணைந்து மதுபான குற்றங்களை தடுப்பதற்கு விழிப்புடன் பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் முந்தைய மாத தினசரி சராசரி விற்பனை தொகையை விட 30 சதவீதத்திற்கும் அதிகமாக விற்பனை நடைபெறும் கடை விவரங்களை நாள்தோறும் கண்டறிந்து அதற்கான காரணம் குறித்து அறிவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.  மாநில எல்லைகளை ஒட்டி மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் 3 மாநில காவல்துறையினர் ஒரே சமயத்தில் தேடுதல் வேட்டை பணியை மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.  நீலகிரி கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குபதிவு ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது.இதனை முன்னிட்டு மூன்று மாநில எல்லையோர மாவட்ட அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மது பாட்டில்கள் கடத்தல், பணம் கொண்டு செல்லுதல், எல்லையோர சோதனை சாவடிகளில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் மற்றும் கொரோனா தொற்று தடுப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Related Stories:

>