தமிழகம் மாளிகை பூங்காவில் புதிர் விளையாட்டு தளம் அமைப்பு

ஊட்டி,மார்ச்6: ஊட்டி தமிழகம் மாளிகை பூங்காவில் புதிர் விளையாட்டு தளம் அமைக்கும் பணி துவங்கி உள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா,ரோஜா பூங்கா,மரவியல் பூங்கா மற்றும் தமிழகம் மாளிகை பூங்கா ஆகியவைகளுக்கு செல்கின்றனர். இந்த பூங்காக்களில் புதிய விளையாட்டு தளங்கள் அல்லது உபகரணங்கள் அமைக்கப்படவில்லை. கடந்த பல ஆண்டுகளாகவே ஒரே மாதிரியான மலர் செடிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்ல வேண்டியுள்ளது. இப்பூங்காக்களில் புதிதாக விளையாட்டு தளங்கள் அமைக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஊட்டி அருகே உள்ள தமிழகம் மாளிகைக் பூங்காவில் புதிர் விளையாட்டு தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மற்ற சுற்றுலாத் தலங்களை காட்டிலும் இங்கு சுற்றுலா பயணிகள் செல்வது மிகவும் குறைவு. அதேசமயம் விஐபிகள் அதிக அளவு செல்லும் இடம். இந்நிலையில் இப்பூங்காவில் இருந்த டென்னிஸ் மைதானத்தை தற்போது புதிர் விளையாட்டு தளமாக மாற்றும் பணியில் தோட்டக்கலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த பூங்காவில் புதிர் விளையாட்டு தளம் அமைப்பதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு லாபம் இல்லை. இதனை வேறு பூங்காக்களில் அமைத்திருக்கலாம் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், நல்ல நிலையிலிருந்த டென்னிஸ் மைதானத்தை அழித்துவிட்டு புதிதாக புதிர் விளையாட்டு தளத்தை அமைப்பதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இல்லை.

Related Stories:

>