தொழில்கூடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை, மார்ச் 6: கோவை தடாகம் சாலை உள்ள டி.வி.எஸ். நகர் பகுதியில் பத்தாண்டு காலமாக குறுந்தொழில் நடத்தி வரும் தனியார் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் தொழிற்கூடத்தை சேதப்படுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறு, குறு தொழில்முனைவோர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து கோவை குறுந்தொழில் அமைப்பான டாக்ட் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது: கொரோனா ஊரடங்கால் தொழில்முனைவோர்கள் பாதிக்கப்பட்டு தற்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர். இதனிடையே, தடாகம் சாலையில் உள்ள டி.வி.எஸ். நகர் பகுதியில் 10 ஆண்டுகளாக குறுந்தொழில் நடத்தி வரும் தனியார் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் ஒன்று உள்ளது. இது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கட்டிட உரிமையாளர் தரப்பில் உள்ள பிரச்னை காரணமாக கட்டிடத்தில் உள்ள தொழிற்கூடங்களை மூட சொல்லி ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, வழக்கும் கோர்ட்டில் உள்ளது.

இதனிடையே, வாடகைதாரர் ஆன குறுந்தொழில் முனைவோரின் தொழில் கூடத்தை ஒரு கும்பல் கடந்த 2ம் தேதி நாசம் செய்தது. அதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் திரண்டு வந்தனர். காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு காவல்துறையினர் வந்து நடவடிக்கை எடுத்தனர்.  துடியலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் எண்ணிக்கை குறைந்த அளவில் இருப்பதாலும், காவலுக்கு  உட்பட்ட எல்லை பகுதி பெரும்பகுதியாக இருப்பதாலும் இது போன்ற பிரச்னைகளை விசாரிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.  இதனால் பாதிக்கப்படுகிறவர்கள் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இது போன்ற பிரச்னைகள் வரும் போது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>