திம்பம் மலைப்பாதையில் 2 லாரிகள் பழுது

சத்தியமங்கலம், மார்ச் 6: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து டிரான்ஸ்பார்மர் உதிரி பாகங்கள் பாரம் ஏற்றிய கண்டெய்னர் லாரி நேற்று அதிகாலை கோவை மாவட்டம் அன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதிகாலை 5 மணி அளவில் லாரி திம்பம் மலைப்பாதை 9வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது பழுதடைந்து நகர முடியாமல் நின்றது. தகவலறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பழுது ஏற்பட்டு நின்று லாரி 14 சக்கரங்கள் கொண்டது என தெரியவந்தது. திம்பம் மலைப்பாதையில் விதிமுறை மீறி 14 சக்கர லாரியை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த டிரைவர் சுரேந்திரா மற்றும் கண்டெய்னர் லாரியை போலீசார் வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.  இதேபோல் நேற்று மதியம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் இருந்து கிரானைட் கல் பாரம் ஏற்றிய லாரி சேலம் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தபோது 26வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. நேற்று ஒரே நாளில் 2 லாரிகள் பழுது ஏற்பட்டதால் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

Related Stories: