கூடுதல் வாக்குச்சாவடி விபரம் தெரியாததால் அரசியல் கட்சியினர் குழப்பம்

ஈரோடு, மார்ச் 6: கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள் குறித்த விபரங்கள் தெளிவாக இல்லாததால் அரசியல் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக வாக்குச்சாவடி மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 926 இடங்களில் 2215 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகளை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, கூடுதலாக 526 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையானது 2741 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் அதே இடத்தில் தான் அமைக்கப்படுகின்றதா? அல்லது இட வசதி இல்லாததால் வேறு இடத்திற்கு மாற்றப்படுகின்றா? என்ற விபரம் தெரியாத நிலை உள்ளது. மேலும், கூடுதல் வாக்குசாவடி அமைக்கும் போது ஏற்கனவே இருந்த வாக்குசாவடியில் உள்ள வாக்காளர்கள் சரிபாதியாக பிரிக்கப்படுவார்களா? அல்லது 1050 வாக்காளர்களுக்கு மேல் இருப்பவர்கள் மட்டும் கூடுதல் வாக்குசாவடியில் சேர்க்கப்படுவார்களா? என்ற விபரங்கள் தெரியாத நிலை உள்ளது. ஏனெனில் இதற்கு ஏற்பதான் பூத் ஏஜென்ட்டுகளை அரசியல் கட்சிகள் நியமிக்க வேண்டி உள்ளதால் மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

 இது குறித்து அரசியல் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: கூடுதல் வாக்குச்சாவடி அமைக்கும் போது தற்போது வாக்களிக்க அதே மையத்தில் கூடுதல் வாக்குச்சாவடி? அல்லது வேறு பகுதிக்கு செல்ல வேண்டுமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மேலும், கூடுதல் வாக்குச்சாவடியில் குறைந்தபட்சம் எத்தனை வாக்காளர்கள் இருப்பார்கள் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.  ஏனெனில், அதற்கு ஏற்ப தான் நாங்கள் பூத் ஏஜென்ட்டுகளை நியமிக்க முடியும். கூடுதல் வாக்குச்சாவடி புதிய இடத்திற்கு மாற்றப்பட்டால் அப்பகுதியில் உள்ள நிர்வாகியைத்தான் பூத் ஏஜென்ட்டாக நியமிக்க வேண்டிய சூழல் உள்ளதால் கூடுதல் வாக்குச்சாவடி அமைவிட விபரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: