புதுக்கோட்டை, ஜூன் 4: புதுக்கோட்டை அருகே உடையாளிப்பட்டியில் திருமணமாகி 2 ஆண்டுகளான பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதில், கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் குடும்பத்தினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி மனைவி காயத்ரி (21). இவர் கடந்த செவ்வாய் அன்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பப் பிரச்னை காரணமாக அவர் இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. உடற்கூறாய்வுக்குப் பிறகு அவரது உடல் செவ்வாய்க்கிழமையே சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இறந்த பெண்ணின் தந்தை விஜயகுமார் உள்ளிட்ட உறவினர்கள், நேற்று உடையாளிப்பட்டி காவல் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தனது பெண்ணின் சாவுக்கு காரணமான அவரது கணவர் குருமூர்த்தி உள்ளிட்டோரைக் கைது செய்து நடவடிக்கைஎடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த மறியல் நடைபெற்றது. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போகச் செய்தனர்.
