2வது கணவருக்கு 2வது திருமணம்: மனைவி புகார்; தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

ஆவடி, மார்ச் 6: சென்னை துரைப்பாக்கம் எழில் நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி(22). இவருக்கு வெங்கடேசன் என்பவருடன் திருமணமாகி 4 வயதில் மகள் இருக்கிறாள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசன்,  மகேஸ்வரிடம் இருந்து விவகாரத்து பெற்றார். இதற்கிடையில், மகேஸ்வரி கடந்த 2 மாதத்திற்கு முன்பு அரும்பாக்கம் என்.எஸ்.கே நகரை சேர்ந்த ஆனந்தராஜ்(28) கார் டிரைவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் துரைப்பாக்கத்தில் வசித்தனர். மேலும், ஆனந்தராஜ், மகேஸ்வரிக்கு தெரியாமல் தனது பெற்றோர் வீட்டுக்கு இரு நாட்களுக்கு ஒரு முறை சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆனந்தராஜிக்கு, அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து புது கன்னியம்மன் நகரை ேசர்ந்த இளம் பெண்ணை பேசி முடிவு செய்தனர்.

அதன்படி இவர்களது திருமண அழைப்பிதழை உறவினர், நண்பர்களுக்கும் இரு வீட்டாரும் கொடுத்தனர். திருமணம்  நேற்று காலை வீராபுரம் முருகன் கோயில் எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. மேலும், வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ரகசிய தகவல், மகேஸ்வரிக்கு தெரியவந்தது. இதனையடுத்து, அவர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அலுவலர் ஞானசுந்தரி தலைமையில் அதிகாரிகள் ஆவடி அனைத்து மகளிர் போலீசாருடன் இணைந்து நேற்று முன்தினம் இரவு திருமணம் நடைபெற இருந்த மண்டபத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் பெற்றோரை வரவழைத்து ஆனந்தராஜிக்கு ஏற்கனவே திருமணமான தகவலை அவர்களிடம் தெரிவித்தனர்.

இதனை கேட்டு பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து மகளின் திருமணத்தை நிறுத்தினர். பின்னர் திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களும் அரைகுறையாக சாப்பிட்டப்படி மண்டபத்தில் இருந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>