வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி: அணுமின் நிலைய நிலா கமிட்டிக்கு எதிர்ப்பு

திருக்கழுக்குன்றம், மார்ச் 5: கல்பாக்கம் அணுமின் நிலைய நில கமிட்டியை ரத்து செய்யவேண்டும் என, 14 கிராம மக்கள் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல்பாக்கம்  அணு மின்  நிலையத்தை  சுற்றி புதுப்பட்டினம், கொக்கிலமேடுஉள்பட 14  கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை கணக்கீடு செய்து அங்குள்ள மக்களிடம் கருத்து கேட்காமல்,  அணுமின் நிலைய நிர்வாகம் தன்னிச்சையாக முடிவு செய்து ‘நிலா’ கமிட்டி என்ற ஒரு  கமிட்டியை அமைத்துள்ளது. அதில் அந்த 14 கிராமங்களிலும் உள்ள சர்வே எண்களை இணைத்து, அந்த எண்களுக்கு வீட்டு மனை அங்கீகாரமோ, கட்டிட அனுமதியோ வழங்கபடாது என்ற நிபந்தனையை ஏற்படுத்தியது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலா கமிட்டியில் வரும்  சர்வே எண்களை பத்திரப்பதிவு செய்யக் கூடாது என கடந்த சில  நாட்களுக்கு முன் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமளா, செங்கல்பட்டு மாவட்ட பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதையறிந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பத்திரப்பதிவு தடை உத்தரவு  மட்டும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. ஆனாலும், நிலா கமிட்டியில் உள்ள 14 கிராமங்களின் சர்வே எண்களுக்கு  கட்டிட அனுமதி மற்றும் வீட்டுமனை அங்கீகாரம் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ‘நிலா கமிட்டி எதிர்ப்பு குழு’      என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

அந்த அமைப்பின்  ஆலோசனைக் கூட்டம் நேற்று கல்பாக்கம் அடுத்த குன்னத்தூரில் நடந்தது. 14 கிராமங்களைச் சேர்ந்த  பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பு மற்றும் கட்சி பிரமுகர்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர்   கலந்து கொண்டனர். அதில், நிலா கமிட்டி என்ற அந்த கமிட்டியை அணுமின் நிலைய நிர்வாகம் முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். 14 கிராமங்களிலும் வரும் சட்டமன்ற  தேர்தலை புறக்கணிக்க வேண்டும். 14 கிராமங்களில் அனைத்து வீடுகளிலும், தெருக்களிலும் கருப்புக்கொடி ஏற்றி நிலா கமிட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து நேற்று கல்பாக்கம் அணுமின் நிலைய வளாக முகப்பு பகுதியான ரவுண்டானா, சதுரங்கப்பட்டினம், குன்னத்தூர், பெருமாள்சேரி, வெங்கப்பாக்கம், அணுபுரம், நெய்குப்பி உள்பட பல்வேறு கிராமங்களின் சாலைகளிலும், மின் கம்பங்களிலும் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து 14 கிராமங்களில் உள்ள  வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றினர்.

Related Stories:

>