பாலியல் புகாரில் சிக்கிய காவல்துறை அதிகாரிகளை கண்டித்து இந்திய ஜனநாயக மாதர் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, மார்ச் 5: பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு எஸ்பி ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, முன்னாள் சிறப்பு டிஜிபி மீது புகார் அளிக்கப்பட்டது.  புகார் அளிக்க சென்னை சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியை, வழியிலேயே மடக்கி மிரட்டியதாக, செங்கல்பட்டு எஸ்பி மீதும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து  பெண் ஐபிஎஸ் அதிகாரி, சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்பி மீது  டிஜிபி, உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெண் ஐபிஎஸ் அதிகாரியை வழி மறித்து மிரட்டிய  செங்கல்பட்டு எஸ்பியை, செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, உளவுத்துறை முதன்மை காவலர் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி, செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், வாலிபர் சங்க மாநில துணை செயலாளர் நந்தன், மாவட்ட செயலாளர் புருஷோத்தமன், மாதர் சங்க மாநில செயலாளர் பிரமிளா, மாவட்ட தலைவர் தமிழரசி, மாவட்ட செயலாளர் கலையரசி, மாவட்ட பொருளாளர் ஜோஸ்பின் விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>