கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ரிதப்ரதா பானர்ஜி, மேற்குவங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது. இதனிடையே கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி எம்எல்ஏ ரிதப்ரதா மற்றும் சந்திபன் சஹா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ ரிதப்பிரதா சட்டப்பேரவை சபாநாயகர் ரதீந்தரிர போஸை சந்தித்து 58சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். மேலும் அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைமை அமைப்பை முன்மொழிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிடத்தக்க அரசியல் சமிக்ஞையாக அதிருப்தி எம்எல்ஏக்கள் சமர்ப்பித்த கடிதத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை தங்களின் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே அவர்களது நோக்கம் கட்சி தலைவரை இலக்காக கொண்டதல்ல, சட்டமன்றக் கட்சியின் தற்போதைய தலைமை அமைப்பையே இலக்காக கொண்டது எனத் தெரிகின்றது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் இதனை நிராகரித்துள்ளனர். விதிகளின்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்த கடிதத்தை யார் சமர்ப்பித்தது? அவ்வாறு செய்வதற்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் இல்லை. சட்டமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஒரே செல்லுபடியாகும் கடிதம் அபிஷேக் பானர்ஜியின் கடிதம் தான். இந்த செயல் சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். சபாநாயகரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ரிதப்ரதா, ‘‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 58 சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய ஆவணத்தை எங்களது அணி சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளது. எங்கள் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் இணைய வாய்ப்புள்ளது. அவர்கள் முறைப்படி தங்கள் ஆதரவை அறிவிக்கும் பட்சத்தில் எங்கள் பலம் மேலும் அதிகரிக்கும்” என்று தெரிவித்தார். இதற்கிடையே 58 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை அளித்த ரிதப்ரதா பானர்ஜியை மேற்குவங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் ரதீந்திர போஸ் அங்கீகரித்து உள்ளார். அந்த அடிப்படையில் ரிதப்ரதா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவராகவும், அக்ருஸ்ஸமான் தலைமை கொறடாவாகவும் நியமிக்கப்பட்டனர். மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஜாவேத் அகமது கான், சந்திபன் சஹா, சபினா யாஸ்மின் மற்றும் ஷியூலி சஹா ஆகியோர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இதனால் 28 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பிறகு, 1998ஆம் ஆண்டில் மம்தா பானர்ஜியால் தொடங்கப்பட்ட இக்கட்சியில் ஏற்பட்ட முதல் அமைப்புரீதியான பிளவை, சட்டப்பேரவைத் தலைவரின் இந்த அங்கீகாரம் முறைப்படி உறுதிப்படுத்தியுள்ளது.
மம்தா தான் தலைவர்;
சபாநாயகருக்கு ரிதப்ரதா பானர்ஜி அனுப்பிய கடிதத்தில், மம்தா பானர்ஜியை திரிணாமூல் காங்கிரஸின் தலைவராக தொடர்ந்து அங்கீகரித்ததோடு, சட்டமன்றக் கட்சியின் செயல்பாடுகளில் அவரது மருமகனும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியின் அதிகாரத்தை இனி ஏற்கப்போவதில்லை என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தனர். ‘நாங்கள் மம்தா பானர்ஜியை எங்கள் தலைவராக ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் அபிஷேக் பானர்ஜியை ஏற்கவில்லை’ என்று அதிருப்தியாளர் அணியுடன் தொடர்புடைய ஒரு தலைவர் கூறினார்.
பா.ஜ முதல்வர் கூட்டத்தில் திரிணாமுல் எம்எல்ஏக்கள்;
மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இழந்துள்ள நிலையில் அங்கு உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இந்நிலையில் பாஜ தலைமையிலான மாநில அரசின் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் நிர்வாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு விசுவாசமானவர்களாக கருதப்பட்ட எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீட்டுக்கட்டு போல சரியும் திரிணாமுல்;
மேற்கு வங்கத்தில் மூத்த காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘‘வரலாற்றில் ஒரு மாறுபட்ட காலகட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளது. சீட்டுக்கட்டுப்போல சரிந்து விழும் விளிம்பில் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ஒரு காலத்தில் கொண்டாடிய அதே அரசியல் தந்திரங்கள் இப்போது அதையே பழிவாங்கத் திரும்பியுள்ளன. அரசியல் கட்சித் தாவல்கள் எனும் ஆட்டத்திற்கு தானே நடுவராக இருப்பதாக முன்னாள் முதல்வர் ஒரு காலத்தில் நம்பினார். இப்போது அதனை பாஜ ஏற்றுக்கொண்டுள்ளது” என்றார்.
கொல்கத்தா மேயர் ராஜினாமா;
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பர்ஹாத் ஹக்கீம் கொல்கத்தா மேயர் பதவியில் இருந்து விலகுவதற்கு ஏற்கனவே கட்சித் தலைவரான மம்தா பானர்ஜியிடம் அனுமதி கோரியிருந்தார். எனினும் அவர் மேயர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டார். இந்நிலையில் மீண்டும் மேயர் பதவியில் இருந்து விலகுவதற்கு அனுமதிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்த நிலையில் மம்தா பானர்ஜி அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து கொல்கத்தா மேயர் பதவியில் இருந்து அவர் விலக இருக்கிறார்.
