×

திருவள்ளூர் - பெரும்புதூர் நெடுஞ்சாலையில் மேல்நல்லாத்தூரில் பஸ் பயணிகள் நிழற்குடை மாயம்: இரவோடு இரவாக இடித்து தரைமட்டம்

திருவள்ளூர், மார்ச் 5: திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் ஊராட்சியில், பஸ் நிறுத்தத்தில் இருந்த நிழற்குடை  இரவோடு இரவாக மாயம்  இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். திருவள்ளூர் - பெரும்புதூர் நெடுஞ்சாலையில் மேல்நல்லாத்தூர் ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள தனியார் தொழிற்சாலையின் இருபுறங்களிலும் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து வியாபாரம், பள்ளி, கல்லூரி, வேலை உள்பட பல்வேறு தேவைகளுக்கு பொதுமக்கள் திருவள்ளூர், பூந்தமல்லி, பெரும்புதூர், ஆவடி, காஞ்சிபுரம் உள்பட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், மேல்நல்லாத்தூர் பஸ் நிறுத்தத்தில் எதிரெதிரே இருந்த பயணிகள் நிழற்குடைகள் இரவோடு இரவாக மாயமாகிவிட்டது. இதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை யார் கொண்டு சென்றனர் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும், பஸ் நிறுத்தம் இருந்த இடத்தை அளவீடு செய்து நெடுஞ்சாலையில் கல் நட்டு இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இந்த செயலை யார் செய்தார்கள் என கேள்வி எழுப்பியதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், இதுவரையில் அதிகாரிகள், இதுபற்றி விசாரிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மேல்நல்லாத்தூர் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, பஸ் நிறுத்த நிழற்குடை இடித்தவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அங்கு புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Perumbudur highway ,Melnallathur ,
× RELATED திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர்...