செல்போன் ராங் காலில் வலை விரித்து சிறுமி உள்பட 3 பேரை கர்ப்பமாக்கிய காதல் மன்னன் போக்சோவில் கைது: மேலும் பலர் பாதிக்கப்பட்டது அம்பலம்

பெரம்பூர், மார்ச் 5: ஓட்டேரியை சேர்ந்த 18 வயது இளம்பெண், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அச்சிறுப்பாக்கம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த திருமலை (22), கடந்த 2 வருடங்களுக்கு முன், செல்போன் மூலம் எனக்கு பழக்கமானார். இந்த பழக்கம் காதலாக மாறியது. பின்னர், என்னை அழைத்து சென்று தாலி கட்டி குடும்பம் நடத்தினார். எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது, எனக்கு தெரியாமல் திருமலை வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதுபற்றி கேட்டபோது, என்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருமலையை நேற்று காலை பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், திருமலை கானா பாடல்களை பாடி அதை யுடியூப் சேனல்களுக்கு கொடுத்து வந்துள்ளார். தனது செல்போனில் இருந்து பல எண்களை அழைத்து பேசுவார். அதில் எந்த எண்ணில் பெண் குரல் கேட்கிறதோ, அவர்களிடம் பேச்சு கொடுத்து, பழகுவார். பின்னர் அவர்களுக்கு காதல் வலை விரிப்பது இவரது வழக்கம். அப்படித்தான் ஓட்டேரி சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று சில நாட்கள் குடும்பம் நடத்திவிட்டு துரத்தி விட்டுள்ளார். இதேபோல், ஆர்கே நகரை சேர்ந்த ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். அந்த பெண் தற்போது 7 மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.

அதுமட்டுமின்றி, அயனாவரத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் காதல் வலை வீசி, உல்லாசமாக இருந்துள்ளார். அவரும் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இவரது செல்போனில் பல சிறுமிகளின் புகைப்படங்களும் இருந்துள்ளன. எனவே பல பெண்களை இவர் ஏமாற்றி இருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். புகாரின் பேரில், திருமலை மீது போக்சோ சட்டம் மற்றும் பெண்ணை கடத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories: