×

கட்டிட விபத்தில் பெரும் பாதிப்படைந்த இளைஞரின் உயிரை காப்பாற்றி புதுவாழ்க்கை: அப்போலோ டாக்டர்கள் சாதனை

சென்னை, மார்ச் 5: சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரூபேஷ் குமார் தலைமையிலான மருத்துவர்கள் குழு, டாக்டர்கள் பிரதீமா ராமச்சந்திரன், தேவச்சந்திரன் ஜெயக்குமார், அவசர சிகிச்சை நிபுணர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, டாக்டர் ரூபேஷ் குமார் நிருபர்களிடம் கூறியதாவது: பெருங்குடியில் உள்ள ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் பணிபுரிந்து வந்த பிரோஜ் ஆலம் (20), கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி 17வது மாடியில் இருந்து தவறி 5வது மாடியில் விழுந்தார்.  இதனால், அவரது உடலில் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. சுயநினைவிழந்த அவரை உடனடியாக ஓஎம்ஆரில் உள்ள அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு சுவாச பிரச்னை, குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததுடன் தலை, வாய், காதுகள் மற்றும் மூக்கில் பலத்த  காயங்கள் ஏற்பட்டு ரத்தப்போக்கு இருந்தது. 2 கால்களின்  எலும்புகளும் வெளியில் தெரிந்தன. ரத்த கட்டிகளால் அதிர்ச்சிகரமான மூளை காயம், முக எலும்பு முறிவு, கழுத்து  பகுதி முதுகெலும்பு முறிவு, கல்லீரல் மற்றும் வலது  சிறுநீரக காயங்கள், கீழ் மூட்டு எலும்பு முறிவுகள்  இருப்பது தெரிந்தது.  பல்வேறு சிறப்பு நிபுனர்கள் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு அவர் மறுவாழ்வு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.  சுய நினைவு நிலைக்கு அவர் மீண்டும் வந்தவுடன், மனநல மருத்துவர்கள் மற்றும் நரம்பியல் உளவியலாளர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். இதைடுத்து அவர் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பினார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED ஆசியாவிலேயே முதல்முறையாக ஒரே நாளில் 4...