- புதுக்கோட்டை அஇஅதிமுக
- எடப்பாடி
- சி. விஜயபாஸ்கர்
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- விராலிமலை
- சட்டமன்ற உறுப்பினர்
- அஇஅதிமுக
- அமைச்சர்
- புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவியை வகித்து வந்தார். இந்நிலையில் சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் எடப்பாடியையும் மீறி சி.விஜயபாஸ்கர் உட்பட 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனால் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பதவி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளராக இருந்த பழனிவேலிடம் ஒப்படைக்கப்பட்டது. பழனிவேல் புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்திற்கு வருகை தந்த போது சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் புதுக்கோட்டையில் அதிமுக அலுவலகம் கடந்த 15 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டு எந்த தரப்பினரையும் அதிமுக அலுவலகத்திற்குள் அனுமதிக்காமல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
புதிய அதிமுக மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட பழனிவேல் புதுக்கோட்டை மாவட்ட காவலர் கண்காணிப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அதிமுக அலுவலகத்திற்கு செல்ல மனு கொடுத்தார்.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருதரப்பையும் அழைத்து வருவாய் கோட்டாட்சியர் பிரகாஷ் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் சி.விஜயபாஸ்கர் தலைமையில் யாரும் பங்கேற்கவில்லை, வழக்கறிஞர் மட்டுமே பங்கேற்றனர். எனவே இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பூட்டப்பட்டிருந்த மாவட்ட அதிமுக அலுவலக சாவியை பேச்சுவார்த்தைக்கு பின்னர் புதன்கிழமை காலை எடப்பாடி பழனிசாமி தரப்பு மாவட்டச் செயலர் பழனிவேல் வசம் சி.விஜயபாஸ்கர் தரப்பினர் ஒப்படைத்தனர்.
பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு எடப்பாடியுடன் வேலுமணி அணி எம்எல்ஏக்கள் மீண்டும் இணைந்த நிலையில் சி.விஜயபாஸ்கர் செல்லவில்லை. தற்போது வரை தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாத சி.விஜயபாஸ்கர் அதிமுகவிலே தொடர போகிறாரா அல்லது பதவியை ராஜினாமா செய்ய போகிறாரா என்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.
