தா.பழூர், ஜூன் 3: தா.பழூர் அருகே உர மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரிடு வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் பண்ணை பாதுகாப்பு பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் 1ம்தேதி முதல்30ம்தேதி வரை நடைபெறுகிறது. இம் முகாமில் மண் பரிசோதனையின் முக்கியத்துவம், மண் பரிசோதனை அடிப்படையில் உரம் அளித்தல், பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி, இயற்கை வேளாண்மை மற்றும் இடுபொருள் தயாரிப்பு பற்றிய தொழில் நுட்பங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்து செயல் விளக்கம் காண்பிக்கப்படும்.
விவசாயிகளுக்கு தேவையான வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது. முதல் நாளான 1ம்தேதி அமிர்தராயன்கோட்டை, வாணதிரையன்பட்டினம் மற்றும் பொற்பொதிந்தநல்லூர் கிராமத்தில் பண்ணை பாதுகாப்பு மற்றும் சமச்சீர் சரிவிகித உர மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஒவ்வொரு கிராமத்திலும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நேற்று திருமானூர் ஒன்றியம் ஏலாக்குறிச்சி மற்றும் பூண்டி கிராமத்தில் முகாம் நடைபெற்றது.
மேலும் ஆண்டிமடம் ஒன்றியம் ஓலையில் கிராமத்திலும் சரிவிகித உர மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நடைபெற்றது. இம் முகாமில் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகு கண்ணன் தலைமையேற்று முகாமின் நோக்கம் எடுத்துரைத்தார். மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ராஜ்கலா, ராஜா ஜோஸ்லின், அசோக்குமார், ஷோபனா, சரண்யா ஆகியோர் கலந்து தொழில் நுட்ப உரையாற்றினார். முடிவில் விவசாயிகள் நன்றி கூறினர்.
