×

தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் செயலாளர் சீனிவாசன் தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதிலிருந்து ஐஏஎஸ் அதிகாரிகள், செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை அதிகாரிகள் என பல்வேறு துறையிலிருந்து மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 2018ம் ஆண்டு சட்டமன்ற செயலகத்தின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட சீனிவாசன் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும் அதே பதவியில் பதவி நீட்டிப்பு பெற்று தொடர்ந்தார். சட்டப்பேரவை செயலகம் தொடர்பான பணிகளில் அதிக அனுபவம் கொண்டவர் என்பதோடு முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கமானவராகவும் சீனிவாசன் அறியப்பட்டார்.

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைந்த பின்னரும், சட்டப்பேரவைச் செயலாளராக தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகரிடம் வழங்கியுள்ளார். அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் அதிமுகவினர் இரண்டு பிரிவுகளாக பிரிந்து அரசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்களித்தனர்.

ஆதரவாக வாக்களித்த எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி எடப்பாடி தரப்பு சபாநாயகரை சந்தித்து மனு அளித்திருந்தது. எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்களில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்த முக்கியமான அரசியல் நிகழ்வுகளில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் பங்கு முக்கியமானதாக இருந்தது.

அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு ஆட்சிக்காலத்திலும் சட்டப்பேரவை செயலாளராக பணியாற்றிய சீனிவாசனுக்கு நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் நவம்பர் 2ம் தேதி வரை இருக்கும் நிலையில், அதற்கு முன்பாகவே தனது பணியை விட்டு விலகியுள்ளார். அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் சாந்தி சட்டப்பேரவையின் அடுத்த சட்டப்பேரவை செயலாளராக நியமிக்கப்பட உள்ளார். மேலும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனுக்கு தற்போது 64 வயதாகிறது.

இவர் கடந்த அதிமுக எடப்பாடி ஆட்சியில் 58 வயதில் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவருக்கு கூடுதலாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. பின்னர் வந்த திமுக ஆட்சியிலும் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் முதல்வராக பொறுப்பேற்றதையடுத்து அவருக்கு சில நெருக்கடிகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் 7 ஆண்டுகள் சட்டப்பேரவை செயலாளராக சீனிவாசன் தொடர்ந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,Legal ,Affairs ,Sinivasan ,Chennai ,Tamil ,Vijay ,IAS ,
× RELATED திருச்சி அருகே கார் மீது லாரி மோதல்...