நன்னிலம் தொகுதியில் 35 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

திருவாரூர், மார்ச் 5: நன்னிலம் எம்எல்ஏ தொகுதியில் 35 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பானுகோபன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் எம்எல்ஏ தொகுதியில் வாக்குச்சாவடிகளில் குடிநீர் வசதி, மின் வசதி, கழிவறை வசதி, சாய்வு தளம் போன்றவை குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரான பானுகோபன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்தி மற்றும் அலுவலர்கள் நேற்று ஆய்வு நடத்தினர். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரான பானுகோபன் கூறுகையில்,நன்னிலம் எம்எல்ஏ தொகுதியில் 1,35,283 ஆண், 1,36,159 பெண், மூன்றாம் பாலினத்தவர் 24 பேர் என மொத்தம் 2,71,464 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக மொத்தம் 379 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 35 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என இதுவரை கண்டறியப்பட்டுள்ளதால் இந்த வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களில் கூடுதல் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் மற்றும் மின் வசதி, கழிவறை, மாற்று திறனாளிகளுக்கான சாய்வு தளம் போன்ற வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் பிரசாரம் தொடர்பான அனுமதியினை அரசியல் கட்சியினர் ஆன்லைன் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 944 34 86537 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Related Stories:

>