தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தயாராக உள்ளது

முத்துப்பேட்டை, மார்ச் 5: தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகமாகி வருவதால் அடுத்த கட்டமாக கடந்த 1ம்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 1ம்தேதி முதல் கொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்டமாக போடப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டம் போட்டவர்கள் ஆர்வத்துடன் இரண்டாம் கட்டமாக போட்டு வருகின்றனர். அதேபோல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் முதல் கட்டமாக ஆர்வத்துடன் வந்து போட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முத்துப்பேட்டை அரசு மருத்துவர் திவ்யா முன்னிலையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வுக்காகவும், அச்சத்தை போக்கும் வகையிலும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் டாக்டர் சையத் அபுதாகிர், மருத்துவர் இளங்கோ உள்ளிட்ட மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதேபோல் தனியார் மருந்து கடை ஊழியர்கள், தனியார் மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இதுகுறித்து அரசு மருத்துவர் பத்மேஷ் கூறுகையில்:

சென்ற மாதம் முதல் கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. கடந்த 1ந்தேதி முதல் இரண்டாம் கட்டம் தடுப்பூசி போட்டு வருகிறோம். அதேபோல் தற்பொழுது 60வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், இணை நோய் உடைய 45வயதுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தேர்தல் பணிகளில் ஈடுபடுவர்கள் யாரும் வந்து போட்டுக்கொள்ளலாம். அதற்காக முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தயார் நிலையில் உள்ளது. தட்டுப்பாடு ஏதுமில்லை என்றார்.

Related Stories: