எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு திருவாரூர் மாவட்டத்தில் கணக்கில் வராத தொகை, பொருள் பறிமுதல் செய்யப்படவில்லை

திருவாரூர், மார்ச் 5: தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 26ம் தேதி அறிவித்தது. மேலும் உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்த நிலையில் அன்று முதல் மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 50 ஆயிரத்திற்கு மேல் கணக்கில் வராமல் எடுத்துச் செல்லப்படும் தொகைகள் மற்றும் பரிசு பொருட்கள் போன்றவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வரும் நிலையில், நேற்று முன்தினம் (3ம் தேதி) வரையில் மாநிலம் முழுவதும் ரூ.10.35கோடி ரொக்கம் மற்றும் ரூ.11 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதாப் சாகு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் தேர்தல் பணிகள் என்பது மிகவும் தாமதமாக துவங்கப்பட்டன. 26ம் தேதி மாலையே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் கடந்த 1ம் தேதி தான் பறக்கும் படையினர் தனது பணிகளை துவக்கினர். நேற்று முன்தினம் வகையில் பறக்கும் படையினர் மூலம் எந்த ஒரு இடத்திலும் கணக்கில் வராத தொகையோ அல்லது பரிசுப் பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை.

இதுகுறித்து நேற்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான சாந்தாவிடம் நிருபர்கள் கேட்டபோது, மாவட்டத்தில் இதுவரையில் எந்த ஒரு இடத்திலும் கணக்கில் வராத தொகை மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யவில்லை. மேலும் விளம்பர பேனர் மற்றும் தட்டி வைக்கப்பட்டுள்ளதாக 6 புகார்கள் மட்டும் பெறப்பட்டுள்ளது.

வங்கிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் மூலம் ரூ.50 ஆயிரம் மற்றும் ஒரு லட்சத்திற்கு மேல் பணம் பரிமாற்றம் நடக்கும் பட்சத்தில் அது குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு வங்கி மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே மகளிர் குழுவினருக்கு கடன் வழங்குவதற்காக வழங்கப்பட்ட அனுமதியின் பேரில் கடன் உதவிகளை வழங்கலாம். ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் புதிதாக அனுமதி வழங்கப்பட்டு கடன்களை வழங்குவதற்கு அனுமதி இல்லை.

மேலும் திருமண நிகழ்ச்சிக்காக நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை வாங்குவதற்காக பொதுமக்கள் செல்லும்போது அந்த தொகை பறக்கும் படையினர் மூலம் பறிமுதல் செய்யப்படும் பட்சத்தில் அந்த தொகையானது வங்கியில் இருந்து எடுக்கப்பட்டு இருந்தால் அதற்கான ரசீது வைத்துக்கொள்ள வேண்டும். அல்லது சேமிப்பு தொகையாக இருந்தால் தாங்கள் திருமணம் நடத்தவுள்ளோம் அதற்காக பொருட்களை வாங்க சேமிப்பு பணத்தை எடுத்துச் சென்றோம் என்பதை இதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினரிடம் மனுவாக தெரிவித்தால் மறுநாளே பறிமுதல் செய்யப்பட்ட தொகை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: