கலெக்டர் அறிவுறுத்தல் தேர்தல் அலுவலர் தகவல் திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 11,000 பேருக்கு தடுப்பூசி

திருவாரூர், மார்ச் 5: திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 1500 போலீசார் உட்பட 11 ஆயிரம் அரசு அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி போடும் மையத்தில் நேற்று தடுப்பூசிக்கான முதல் தவணையை செலுத்தி கொண்ட பிறகு கலெக்டர் சாந்தா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயது முதல் 59 வயது வரையில் இணை நோயுள்ளவர்கள் போன்றவர்களுக்கு இந்த தடுப்பூசியினை போடுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி போடும் பணி தற்போது துவங்கியுள்ளது.

இதனையொட்டி மாவட்டம் முழுவதும் இருந்து வரும் 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள், மன்னார்குடி மாவட்ட தலைமை மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் இந்த தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது மேலும் 5 தனியார் மருத்துவமனைகளுக்கும் அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணமாக செலுத்தி பொதுமக்கள் தடுப்பூசியினை போட்டு கொள்ளலாம்.

மேலும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக மாவட்டம் முழுவதும் 1,454 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 1500 போலீசார் உட்பட மொத்தம் 11 ஆயிரம் அரசு அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த 11,000 அலுவலர்களும் ஒரு வார காலத்திற்குள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதற்காக அரசு அலுவலர்களின் நலன்கருதி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் தடுப்பூசி போடும் மையம் அமைக்கப்பட்டுள்ளதால் அரசு அலுவலர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து இந்த மையத்திலும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Related Stories:

>