ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு பகுதியில் பலத்த சூறைக்காற்றால் 300 வாழை மரங்கள் சேதமானது. வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பகலில் அதிகளவு வெயில் கொளுத்தும் நிலையில் மாலை மற்றும் இரவில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஒடுகத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ஆசனாம்பட்டு, கல்லாப்பாறை, தென்புதூர், மேல்பள்ளிப்பட்டு, சின்னப்பள்ளிகுப்பம், பாக்கம்பாளையம், பாக்கம், குரவன்கொட்டாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழையுடன் பலத்த காற்று வீசியது. இதில் ஆசனாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜலேந்திரன் என்பவர் தனது விவசாய நிலத்தில் சுமார் 1 ஏக்கரில் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமானது. ஒடுகத்தூர் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த சூறைக்காற்றால் விவசாய பயிர்கள், வாழை மரங்கள் முறிந்து சேதமாகியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சேதமடைந்த பயிர்களை கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
