×

அரவக்குறிச்சி பகுதி பஸ்நிறுத்தங்களில் கோடைகோல நிழல்பந்தல் அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி, மார்ச் 5: அரவக்குறிச்சியில் கடும் கோடை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பேருந்து நிறுத்தங்களில் கோடைகால நிழல்பந்தல் அமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று முதல் வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தற்போது இரவில் கடும் பனியும், பகலில் கடும் வெயிலும் என சீதோஷ்ணநிலை இருந்து வருகிறது. கோடைகால தொடத்திலேயே அரவக்குறிச்சி பகுதியில் அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைக்கின்றது. நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெயில் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகும்.

இந்நிலையில் அரவக்குறிச்சியிலிருந்து வேலைக்காக வெளியூர் செல்பவர்கள், வியாபார நிமித்தமாக வெளியூர் செல்லும் வணிகளர்கள், வெளியூரிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள், மருத்துவமனைக்கு வரும் கிராம நோயாளிகள், தாலுகா அலுவலகம், காவல்நிலையம், ஒன்றிய அலுவலகம், பேருராட்சி அலுவலகம், கல்வி அலுவலகம், வங்கிகள் என்றுபல்வேறு அலுவலகங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் வேலை நிமித்தமாக அரவக்குறிச்சி வருகின்றனர். இவர்கள் மதியம் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி செல்வதற்காக பேருந்து நிறுத்தங்களில் பஸ்சுக்காக வெயிலில் காத்து நிற்கின்றனர். வாட்டி வதைக்கும் வெயிலில் வெட்ட வெளியில் நின்று காத்திருக்க வேண்டியுள்ளது.

இதனால் குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டவெயிலில் கடும் அவதிப்படுகின்றனர். எனவே அரவக்குறிச்சியிலுள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான தாலுகா அலுவலம் அருகில், ஏவிஎம் கார்னர் மற்றும் மேற்கே பேருந்து நிலைய பஸ் நிறுத்தம், போலீஸ் நிலைய பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் நலன் கருதி கோடைகால நிழல்பந்தல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aravakachchi ,
× RELATED காவிரியில் போதிய இருப்பு இல்லாததால்...