கணவரால் கைவிடப்பட்ட, விதவை பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்

தோகைமலை, மார்ச் 5: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்ச்சம்பட்டி ஊராட்சி மன்றம் சார்பாக கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதவை பெண்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் ஆலோசனை கருத்தரங்கம் நடந்தது. ஆர்ச்சம்பட்டி சமுதாயக்கூடத்தில் நடந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா கோவிந்தராஜ் தலைமை வகித்தார். திருச்சி தனியார் கல்லூரி பேராசிரியர் பெர்க்மான்ஸ், உதயம் நிர்வாகி பிரான்ஸிஸ் சேவியர் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

இன்றைய ஆண்கள் மத்தியில் குடி பழக்கத்திற்கு அடிமையாகி இறப்பது, மது உள்பட பல்வேறு போதை பொருட்களை பயன்படுத்தி விபத்துகளில் இறப்பது மற்றும் உடல்நிலை, வயது முதிர்வுகளால் பெரும்பாலான ஆண்கள் இறந்துவிடுவதோடு விவாகரத்தும் நடைபெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு கிராமங்களிலும் கனவரால் கைவிடப்பட்ட பெண்கள், கணவரை இழந்த விதவை பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற நிலைகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டு சமுதாயத்தில் எதிர்நீச்சலாக பெண்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற நிலைகள் வராமல் தடுப்பதற்கு வளரும் குழந்தைகளுக்கு கல்விக்கூடங்களுக்கு அனுப்புவதோடு வாழ்க்கை முறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.

கணவரால் கைவிடப்பட்ட மற்றும் கணவரை இழந்த விதவை பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். கை தொழில், பெட்டிக்கடை, கறவை மாடு வளர்த்தல் உள்பட பல்வேறு தொழில்களை செய்ய வேண்டும். தமிழக அரசின் திட்டங்களை முழுமையாக பெறுவதற்கு ஊராட்சி மன்றத்தை அணுகி பயன்பெற வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். மேலும் அனைவருக்கும் போர்வைகள் வழங்கப்பட்டது. இதில் உதயம் பணியாளர் ஜேக்கப், தனியார் கல்லூரி ஜெயசந்திரன், ஆசிரியர் கோவிந்தராஜ், பிரான்சீஸ் சேவியர் உள்பட 100க்கும் அதிகமான கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், கணவரை இழந்த விதவை பெண்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: