×

அரசு உதவித்தொகை பெரும் இளைஞர்கள் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்

 

கரூர், ஜூன் 2: அரசு உதவித்தொகை பெரும் இளைஞர்கள்சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்மென கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முத்துக்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் படித்து முடித்து பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்காக மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, பத்தாம் வகுப்பு தர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600, வீதம் மூன்றாண்டு காலத்திற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.600, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ.750 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1000, வீதம் பத்தாண்டு காலத்திற்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 31.03.2026 உடன் ஐந்தாண்டுகாலம் முடிவுற்ற பதிவுதாரர்களும், மேலும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள், பதிவு செய்து ஒரு வருடம் முடிவுற்ற பதிவுதாரர்களும் தகுதியானவர்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

மனுதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. மனுதாரர் அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் வாயிலாக எந்தவிதமான நிதி உதவித் தொகையும் பெறுபவராக இருக்கக் கூடாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியாக இருத்தல் கூடாது. இந்நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக் கல்விகற்கும் மனுதாரர்களுக்கு பொருந்தாது. மேலும் மனுதாரர் உதவித் தொகைபெறும் காலங்களில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.

மேற்கண்ட தகுதியுடையவர்கள் உடனடியாக கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருமாறு தெரிவிக்கப்படுகிறது. சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே தொடர்ச்சியாக உதவித்தொகை 3 ஆண்டுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும் வழங்கப்படும், இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காதவர்கள், உடனடியாக மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தினை சமர்ப்பிக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

 

Tags : Karur ,District Collector ,Muthukumaran ,District Employment and Career Guidance Center… ,
× RELATED வீடுகள், கடைகளில் சேரும் குப்பைகள் தரம்பிரித்து தராவிட்டால் நடவடிக்கை