100% வாக்களிக்கக்கோரி கையெழுத்து இயக்கம்

கலெக்டர் துவக்கி வைத்தார்

விருதுநகர், மார்ச் 5: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கண்ணன், 100 சதவீத வாக்களிக்க விழிப்புணர்வு கையெழுத்து இயத்தை துவக்கி வைத்தார். மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் அனைத்து அரசு அலுவலர்களும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் டிஆர்ஓ மங்களராமசுப்பிரமணியன், திட்ட அலுவலர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

மாதிரி வாக்குப்பதிவு ஒத்திகை

சட்டமன்ற தேர்தலில் காரியாபட்டியில் எந்த வாக்காளரும் விடுபடாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாதிரி வாக்குப்பதிவு ஒத்திகை பஸ்நிலையம் முன்பு நடைபெற்றது. காரியாபட்டி வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜ் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் காசிமாயன், கிராம ஊழியர் சுதந்திரசெல்வி, தர்மலிங்கம் கலந்து கொண்டனர். இதே போல அருப்புக்கோட்டை தாலுகா தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. மாதிரி மின்னணு இயந்திரத்தில் பொதுமக்கள் ஒட்டு போட்டனர். தேர்தல்பிரிவு துணை தாசில்தார் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிலம்ப வெற்றியாளர்களுக்கு பாராட்டு

விருதுநகரில் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் பிப்.21ம் தேதி சிலம்பம் போட்டி நடைபெற்றது. சாத்தூர் பகுதியிலிருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 30க்கு மேற்பட்டோர் பரிசுகளை குவித்தனர். சாத்தூரில் இருந்து மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று 6 பேர் மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு சாத்தூரில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. ஏழாயிரம்பண்ணை எஸ்ஐ ராமசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.தனிநபர் பிரிவில் தொடர்ந்து 4 மணி நேரம் சிலம்பாடி உலக சாதனை படைத்த சிலம்ப பயிற்சியாளர் தங்கப்பாண்டியனுக்கு பதக்கம் அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

தாழ்வாக செல்லும் மின்வயர்

காரியாபட்டி யூனியன் அலுவலக வளாகத்திற்குள் மின்வயர் தாழ்வாக செல்கிறது. அலுவலக வளாகத்தில் பின்புறம் விவசாய அலுவலகம் உள்ளது. இதன் வழியாக சிமெண்ட் லாரி விவசாய விதைகள் இறக்குவதற்கு லாரிகள் வந்து செல்லும் பாதையாகவும் உள்ளது. மேலும் யூனியன் அலுவலகத்திற்கு வரும் அரசியல்வாதிகளின் வாகனங்கள் இப்பகுதியில் நிறுத்துவது வழக்கம். எனவே, மிகவும் தாழ்நிலையில் செல்லும் மின்கம்பியால் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே, விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மது விற்ற இருவர் கைது

 சாத்தூர் தாலுகா போலீஸ் எஸ்ஐ சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது நடுச்சூரங்குடி சுடுகாடு அருகே  மதுபாட்டில் விற்ற மாரிமுத்து(53) என்பவரிடம் இருந்து 7 மதுபாட்டில், பஸ் ஸ்டாப் அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற அதேகிராமத்தை சேர்ந்த மதியழகன் (51) என்பவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவரையும்  போலீசார் கைது செய்தனர்.

சூதாடிய 2 பேர் கைது

 சாத்தூர் அருகே புல்லக்கவுண்டன்பட்டி பஸ்ஸ்டாப் பின்புறம் பணம் வைத்து சூதாடிய  வேலுச்சாமி(48),காளியப்பன்(62) ஆகிய இருவரையும் ஏழாயிரம்பண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டுகட்டுகளை பறிமுதல் செய்தனர்.

முதியவருக்கு 3 ஆண்டு சிறை

திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது மம்சாபுரம் பகுதியில் 6.9.2018 அன்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூலித்தொழிலாளி பரமன்(68) கைது செய்யப்பட்டார். இவர் மீது திருவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில்  அனைத்து மகளிர் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.       இவ்வழக்கில் பரமனுக்கு 3 ஆண்டு சிறை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி பரிமளா உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார்.

பகலிலும் எரியும் தெருவிளக்குகள்

ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ்நிலையம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மின்சார விளக்குகள், உயணர் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை நேரங்களில் எரியவிடப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட மின்சார விளக்குகள் பகலிலும் எரிந்து வருகிறது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் வேலையில் இது போன்று மக்கள் பணம் வீணடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒளிப்பதிவு வேலை கோரி மனு

விருதுநகர் மாவட்ட போட்டோ, வீடியோ கிராபர்ஸ் அசோசியேஷன் சங்க மாவட்ட தலைவர் சுப்புராஜன் தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனு: மாவட்ட போட்டோ, வீடியோ கிராபர் சங்கத்தில் 700 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் ஒளிப்பதிவு செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் கார்ப்ரேட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கி இருப்பதால் மாவட்டத்தில் உள்ள போட்டோ, வீடியோ கிராபர்கள் ஒத்துழைப்பு தர முடியாது. 700 உறுப்பினர்கள் வாழ்வாதாரம் கருதி தேர்தல் ஒளிப்பதிவு பணியை சங்கத்திற்கு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>