×

கால்வாய் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம் பொதுமக்கள் வாக்குவாதம் வேலூர் சைதாப்பேட்டையில் கானாற்றையே மூடியிருந்தனர்

வேலூர், மார்ச் 5: வேலூர் சைதாப்பேட்டையில் மூடப்பட்டிருந்த கானாற்றை கால்வாய் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. இதனால் பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாநகராட்சி 28வது வார்டில் உள்ள எடத்தெரு, கானாறு மசூதி தெரு ஆகிய பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன. இங்குள்ள கால்வாய்கள் சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக தூர் வாரப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் லேசான மழைக்கும் தாக்குப்பிடிக்காமல் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நிலை உள்ளது. இதனால்அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர். இந்த கால்வாயே தெரியாத அளவுக்கு முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து கோடை மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களை தூர்வார மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி 2வது மண்டல கட்டிட ஆய்வாளர் மதிவாணன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று கால்வாய் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி தூர்வாரும் பணியை தொடங்கினர்.அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய்களை தூர் வாரவேண்டிய அவசியம் குறித்து விளக்கினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். ெதாடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இப்பகுதியில் உள்ள கால்வாய் 8 அடி ஆழம், 8 அடி அகலத்திற்கு அமைக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் ஆக்கிரமிப்பு மற்றும் தூர் வாரமல் போனதால், மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது தூர்வாரும் பணியால் இனிவரும் மழைக்காலத்தில் சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடாது’ என தெரிவித்தனர்.

கால்வாய் தெரியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு
வேலூர் மாநகராட்சியின் பல பகுதிகளில் கால்வாயில் மீது கடை, வீடுகளை கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில், நேற்று சைதாப்பேட்டை எடத்ெதரு, கானாறு மசூதி தெருவில் கால்வாய் இருப்பதற்கான அடையாளமே தெரியாத அளவிற்கு முற்றிலும் ஆக்கிரமித்து இருந்தனர். கால்வாய் மீது கடைகள், வீடுகள் என பல்வேறு வகைகளில் முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தனர். ஆக்கிரமிப்புகள் நடக்கும்ேபாது சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதால் தான் போட்டிபோட்டு ஆக்கிரமித்துக்கொள்கின்றனர். எனவே ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோகும் மாநகராட்சி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் சைதாப்பேட்டை கானாறு மசூதி தெருவில் ஆக்கிரமிப்பு கடைகள் நேற்று மாநகராட்சி சார்பில் ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு அகற்றப்பட்டது.

Tags : Vellore Saidapet ,
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...