மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 27 நாட்கள் பாதுகாக்க வேண்டிய நெருக்கடி வாக்கு எண்ணிக்கை மையங்களை முடிவு செய்வதில் தாமதம் திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, மார்ச் 5: திருவண்ணாமலை மாவட்டத்தில், சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, வரும் 12ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. வரும் 20ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 22ம் தேதி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.

அதையொட்டி, நூறு சதவீத வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வாக்குச்சாவடி மையங்களை தயார்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்த பிறகு, வாக்கு எண்ணிக்கை நடைபெற 27 நாட்கள் இடைவெளி உள்ளது. எனவே, அதுவரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கை மையங்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாத்தல், வாக்கு எண்ணிக்கைக்கான விசாலமான அறைகள், மின்னணு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் ஆகியவை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2011ம் ஆண்டு சட்மன்ற தேர்தலில், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு பள்ளியில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் தொகுதிகளுக்கும், போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போளூர், கலசபாக்கம் தொகுதிகளுக்கும், செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செங்கம் தொகுதிக்கும், செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் செய்யாறு, ஆரணி, வந்தவாசி தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியில் திருவண்ணாமலை, செங்கம் தொகுதிக்கும், திருவண்ணாமலை சண்முகா அரசு மேல்நிலைப் பள்ளியில் கீழ்ெபன்னாத்தூர், கலசபாக்கம் தொகுதிக்கும், ஆரணி தச்சூர் அரசு பொறியியல் கல்லூரியில் ஆரணி, போளூர் தொகுதிக்கும், செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் செய்யாறு, வந்தவாசி தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளுக்கு 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்த 3 நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடந்ததால், வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. இந்நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கைக்கு 27 நாட்கள் இடைவெளி இருப்பதால், திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய 2 இடங்களில் மட்டும் வாக்கு எண்ணிக்கை மையங்களை அமைக்க பரிசீலனை நடந்து வருகிறது. இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து தேர்தல் ஆணையம் இறுதி செய்து பதில் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>