சினிமா பார்க்க வரும் ரசிகர்களுக்கு பிரியாணி, குலுக்கல் முறையில் பரிசு படக்குழுவினர் அதிரடி அறிவிப்பு சேத்துப்பட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டது

சேத்துப்பட்டு, மார்ச் 5: சேத்துப்பட்டில் உள்ள தியேட்டரில் சினிமா பார்க்க வருபவர்களுக்கு பிரியாணி மற்றும் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டது. பின்னர் நோய் தொற்று குறைய தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. எனவே, அரசின் கொரோனா விதிமுறைகளின்படி ஒரு சில சினிமா தியேட்டர்கள் தற்போது திறக்கப்பட்டு வருகிறது.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் வரவில்லை. இதனால் பெரும்பாலான தியேட்டர்கள் காலியாகவே இருப்பதாக தெரிகிறது. எனவே, சினிமா ரசிகர்களை கவர திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் ஒரு நூதன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சேத்துப்பட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் இன்று (5ம் தேதி) புதிய திரைப்படம் ஒன்று திரையிடப்பட உள்ளது. இந்த திரைப்படம் சேத்துப்பட்டு பகுதிகளில் எடுக்கப்பட்டதாகவும், கல்லூரி மாணவர்களின் கதையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த படத்தை காண வரும் ரசிகர்களுக்கு பிரியாணி பொட்டலம் வழங்கப்படும். மேலும், குலுக்கல் முறையில் ரசிகர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசும் வழங்கப்படும் என படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூதன அறிவிப்பால் சேத்துப்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Related Stories:

>