×

பதற்றமான 374 வாக்குச்சாவடிகளை ஆன்லைனில் கண்காணிக்க ஏற்பாடு திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, மார்ச் 5: திருவண்ணாமலை மாவட்டத்தில், 374 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அந்த மையங்களை ஆன்லைனில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் தற்போது 2,885 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலைவிட இந்த தேர்தலில் 564 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அதிகபட்சம் 1,050 வாக்காளர்கள் மட்டும் வாக்களிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் வன்முறைகள், வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல், சாலை மறியல், போராட்டம், வாக்குச்சாவடி கைப்பற்றுதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்ற வாக்குச்சாவடிகளை பதற்றமானவை என கண்டறிந்து பட்டியலிட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த கால தேர்தல் அனுபவங்களின் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 168 பகுதிகளில் அமைந்துள்ள 374 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என முதற்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளன. அதில், 214 வாக்குச்சாவடிகள் அதிக பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. மேலும், அரசியல் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, அதன் அடிப்படையில் பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை மாறுபடும் வாய்ப்பு உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

எனவே, தற்போது நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிக பதற்றமுள்ள வாக்குச்சாவடிகளுக்கு, துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிக்கிறது. இந்நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளின் நடவடிக்கைகளை வெப்கேமரா மூலம் ஆன்லைனில் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர். அதையொட்டி, பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் வெப்கேமரா பொருத்தி, ஆன்லைனில் கண்காணிக்க வசதியாக இணையதள வசதி கிடைக்கிறதா என ஆய்வு செய்யும் பணி விரைவில் நடைபெற உள்ளது.

Tags : Thiruvannamalai ,
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...