சட்டமன்ற தேர்தலையொட்டி திருப்பூரில் கொடி, பேனர் தயாரிக்கும் பணி தீவிரம்

திருப்பூர், மார்ச் 4: கொடி, பேனர் தயாரிப்பு பணிக்கு புகழ் பெற்ற திருப்பூர் மாநகரில், சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளன. சட்டமன்றத் தேர்தல் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6 ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை அரசியல் கட்சிகள் துவங்கியுள்ள நிலையில், கொடி, பேனர் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் சூடுபிடித்துள்ளன. அரசியல் கட்சிகளின் பிரசாரங்களுக்கு தேவையான கொடி, பேனர், பிரசுரங்கள், போஸ்டர்களில் பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு பணிகளுக்கு சிவகாசியும், துணிகள் மீது பிரிண்டிங் செய்வதற்கு திருப்பூர் சிறந்து விளங்கி வருகிறது. கொடி, பேனர் தயாரிப்பை பொறுத்தவரை தமிழகத்தில் திருப்பூர் மாநகரம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் மாநகரில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கொடிகளும், பேனர்களும் தயாரிக்கப்பட்டு, தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் கொடி, பேனர் தயாரிப்பு பணிகள் தற்போது துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. திருப்பூரில் கருவம்பாளையம், பழைய பஸ்நிலையம், புது பஸ் நிலையம் உள்ளிட்ட சில பகுதிகளில் கொடி, பேனர் தயாரிப்பு தொழில் நடந்து வருகிறது. இதுகுறித்து, கருவம்பாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக கொடி, பேனர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளாக அரசியல் கட்சிகளின் கொடிகள், பேனர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். தமிழகம் மட்டுமல்லாது, புதுவை, கேரளா மற்றும் சில வடமாநிலங்களில் இருந்து கொடிகள் ஆர்டர் எடுத்து செய்து வருகிறோம். தேசிய அளவில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய கட்சிகளிடம் இருந்து ஒட்டுமொத்தமாக ஆர்டர்களை பெற்று பணிகள் நடந்து வருகிறது. இது தவிர மாநில கட்சிகளிடமும் ஆர்டர்கள் பெற்று கொடி தயாரிப்பு பணியை செய்து வருகிறோம். இவ்வாறு தெரிவித்தனர். டிஜிட்டல் பிளக்ஸ் உள்ளிட்டவற்றின் வரவால் இந்த தொழிலில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மாறாக கடந்த முறையை விட கூடுதல் ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக அச்சக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>