வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

ஊட்டி, மார்ச் 4: பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ‘்கறை நல்லதுங்க’ என்ற லோகா வெளியிடப்பட்டுள்ளது. ஊட்டி மத்திய பஸ் நிலைய வளாகத்தில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு சாதி, மதம், இனம், வகுப்பு, மொழி, அச்சம், நிறம், பணம் தவிர்த்து வாக்களிப்பது நமது கடமை மற்றும் உரிமை என்ற அடிப்படையில் வாக்களித்ததை உறுதிபடுத்தி ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் கருப்பு மையை குறிக்கும் விதமாக ‘்கறை நல்லதுங்க’ என்ற விழிப்புணர்வு லோகோவை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து விழிப்புணர்வு குறும்பட வாகன பிரசாரத்தையும் துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதில் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. இதற்கென ‘்கறை நல்லதுங்க’ என்ற பெயரில் விழிப்புணர்வு லோகோ வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட குறும்படம் ஒளிபரப்பும் விழிப்புணர்வு பிரசாரம் துவக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கும் இவ்வாகனத்தின் மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த தேர்தலின்போது குறைவான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது என்றார். நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் பாபு, ஊட்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மோனிகா ரானா, குன்னூர் தொகுதி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் ரஞ்சித் சிங், பி.ஆர்.ஓ. சையது முகமது உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: