பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க ஆம்புலன்ஸ், அரசு பஸ்களில் சோதனை மேற்கொள்ள அறிவுரை

ஊட்டி, மார்ச் 4: பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் ஆம்புலன்ஸ், அரசு பஸ்களிலும் கட்டாயம் சோதனை மேற்கொள்ள வேண்டும் என பறக்கும் படையினருக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினருடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக பின்பற்றுவது தொடர்பான கூட்டம் ஊட்டியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து பேசுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை பாகுபாடுமின்றி முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களை கொண்டு தேர்தல் பணியில் ஈடுபட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.இக்குழுவில் உள்ளவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை நேர்மையாக மேற்கொள்ள வேண்டும். பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். அரசு பஸ்கள், ஆம்புலன்ஸ்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்திலும் சோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். தேர்தல் பார்வையாளர்கள் ஊட்டி மாவட்டத்திற்கு வந்து, அனைத்து பணிகளையும் கண்காணிப்பாா–்கள். எனவே எந்தவொரு தவறும் ஏற்படாத வகையில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றிட வேண்டும். பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால் அதனை உடனடியாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

 தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அனைத்து குழுவினரும் சோதனைகள் மேற்கொள்ளும்போது நேர்மையாகவும், கண்ணியத்துடனமும் நடந்து கொள்ள வேண்டும்.  வீடுகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது குறித்து தகவல் தெரிந்தால் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும். அவர்கள் சோதனையிடும் வரை கட்டிடங்களில் இருந்து யாரும் வெளியேறாமல் பார்த்து கொள்ள வேண்டும். பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்றால் காவல்துறையினர் உதவியுடன் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: