சாலை சீரமைக்காததை கண்டித்து கப்பல் விட்டு நூதன போராட்டம்

ஊட்டி, மார்ச் 4: ஊட்டி அருகேயுள்ள பாலாகொலா ஊராட்சிக்குட்பட்ட மைனலை மட்டம், தேனாடு, மைனலை, கிட்டட்டி மட்டம் ஆகிய கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்கள் வெளியூர், ஊட்டி போன்ற பகுதிகளுக்குச் செல்ல சுமார் 3 கி.மீ. தொலைவு உள்ள பஞ்சாயத்து சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை சீரமைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சாலையில் பல இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளது. இதில், தண்ணீர் நிறைந்து சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இச்சாலையை சீரமைக்கக்கோரி கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், பஞ்சாயத்து நிர்வாகம் இதுவரை சீரமைக்கவில்லை. கடந்த ஆண்டு இச்சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதுவரை இச்சாலையை சீரமைக்கப்படாத நிலையில் பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தை அணுகி உள்ளனர். அவர்கள், தேர்தல் சமயம் என்பதால் இச்சாலையை தற்போது சீரமைக்க முடியாது. தேர்தல் முடிந்த பின்னர் சாலையை சீரமைக்கும் பணி துவக்கப்படும் என கூறியுள்ளனர். இச்சாலை சீரமைக்கக்கோரி நேற்று கவுன்சிலர் ராஜேஸ்வரி தலைமையில் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளங்களில் தேங்கி உள்ள தண்ணீரில் பேப்பர் கப்பல்களை விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் அதிகாரிகள் யாரும் அப்பகுதிக்கு வரவில்லை. விரைவில் இச்சாலையை சீரமைக்க வில்லை எனில் ஊட்டி - மஞ்சூர் சாலையில் மைனலை மட்டம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபடப்போவதாகவும் அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories:

>