சென்னை: தமிழக மின்சாரத்துறையின் டெண்டர் சார்ந்த விவரங்களை ஆராய 3 புதிய குழுக்களை அமைத்து அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். சமீபத்தில் சென்னையில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், கடந்த கால டெண்டர் முறைகள் குறித்து மறு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், தகுதியுள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே வெளிப்படையான முறையில் டெண்டர்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கொள்முதல் மற்றும் ஒப்பந்த நடைமுறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, டெண்டர் விவரங்களை ஆராய சந்தை பகுப்பாய்வு குழு, உற்பத்தியாளர் மதிப்பீட்டு குழு மற்றும் குறுக்கு சரிபார்ப்பு குழு என 3 புதிய குழுக்கள் அமைக்க எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, மின்துறையின் எந்தவொரு பிரிவிலும் புதிய டெண்டர் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்பாக, இந்த குழுக்களின் விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தி முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் நிர்வாக சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, விரைவில் டிஜிட்டல் போர்டல் சார்ந்த டெண்டர் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் மனித தலையீடுகள் குறைக்கப்பட்டு, ஒட்டுமொத்த டெண்டர் செயல்முறையும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பொதுவெளியில் வெளிப்படையாக கண்காணிக்கப்படும். தற்போது கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் மின்சார வாரியத்தை மீட்டெடுக்கவும், முறையற்ற கூடுதல் விலை நிர்ணயங்களை தவிர்க்கவும் இக்குழுக்களின் கண்காணிப்பு மிகவும் அவசியமானது என மின்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
