அன்னூர் அருகே குடிநீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு இரு தரப்பினர் இடையே தகராறு

அன்னூர், மார்ச் 4:  அன்னூர் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு பூமி பூஜை போட எதிர்ப்பு தெரிவித்து இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அன்னூர் அருகே அச்சம்பாளையம் பகுதியில் கடந்த சில மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பெரியார் காலனி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஏற்கனவே அச்சம்பாளையம் பகுதியில் 90 ஆயிரம் லிட்டர் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. அதில் தற்போது, அச்சம்பாளையம் பகுதிக்கு 80 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்க மேல்நிலை தொட்டி கட்டும் பணிக்கு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் அன்னூர் ஊராட்சி ஒன்றிய மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதில், அச்சம்பாளையம் பகுதிக்கு 60 ஆயிரம் லிட்டர் மற்றும் அருகில் உள்ள பெரியார் காலனி பகுதிக்கு 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி கட்ட வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். நேற்று அப்பகுதியில் உள்ள துவக்கப்பள்ளியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு பெரியார் காலனி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் பகுதியில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி முதலில் கட்ட வேண்டும் எனக்கூறி தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், எங்கள் பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதுவரை குடிநீர் விநியோகம் எங்களுக்கு சீராக தரப்படவில்லை என வாக்குவாதம் செய்தனர். இதனால், இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னூர் போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து, பெரியார் காலனி பொதுமக்கள் தாங்கள் ஊர் கூட்டம் போட்டு முடிவு எடுப்பதாக கூறி கலைந்து சென்றனர்.

Related Stories: