திருச்செந்தூர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி தரிசனம்

 

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் அவதரித்த ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த திருவிழாவாக கடந்த மே மாதம் 21ம் தேதி தொடங்கி, பத்து நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் கோயிலில் உச்சிகால தீபாராதனைக்குப் பின்பு சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி ராஜகோபுரம் எதிரே உள்ள வசந்த மண்டபம் சேர்ந்தார்.

அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும் நடைபெற்றது. இவ்வைபவத்தின் போது ஒவ்வொரு சுற்றிலும் வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ், பிரம்மதாளம், நந்தி மத்தளம், சங்கநாதம், பிள்ளைத்தமிழ், நாதசுரம், வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு, கப்பல் பாட்டு முதலானவைகள் பக்தர்களால் பாடப்பெற்றன. அதன்பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 9 நாட்கள் நடந்த விழாவின் 10ம் நாள் இன்று வைகாசி விசாகத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலிலிருந்து சண்முக விலாச மண்டபம் சேர்ந்தார். மாலை அங்கு வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்று அதனைத்தொடர்ந்து மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது.

பின்னர் மகா தீபாராதனை ஆகி சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் இருப்பிடம் சேர்ந்து நிறைவு பெறுகிறது. வைகாசி விசாகத்திருவிழாவில் சுவாமியை தரிசனம் செய்வதற்காகவே கடந்த சில நாட்களாவே திருச்செந்தூருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் விரதமிருந்து, பாதயாத்திரையாக வந்ததால் திருக்கோயில் வளாகமே பக்தர்களால் நிரம்பி வழிந்தது. குறிப்பாக இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலிருந்தே கடலில் புனித நீராடியதால் கடற்கரையில் அலைபோல் மக்கள் வெள்ளம் காணப்பட்டது.

மேலும் பல்வேறு வாகனங்களிலும் பக்தர்கள் நேற்று மாலை முதலே திருச்செந்தூர் வந்ததால் கோயில் வளாகத்தில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பக்தர்கள் காவடி, அலகு குத்தியும், பால்குடம் மற்றும் அங்கப்பிரதட்சணை மற்றும் அடிப்பிரதட்சணை செய்தும் தங்கள் நேர்த்திகடனை சுவாமிக்கு செலுத்தினர். கூட்ட நெரிசல் காரணமாக திருக்கோயில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட இடங்களிலே பக்தர்கள் தாங்களே தங்கள் தேங்காய் பழங்களை உடைத்து பூஜை செய்து விட்டு சென்றனர். ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Related Stories: