×

விலைவாசி உயர்வுக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் 10 ஆண்டுகால ஆட்சியில் வணிகர்களின் எந்த பிரச்னையும் தீர்க்கவில்லை வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா பேட்டி

திருவண்ணாமலை, மார்ச் 4: கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் வணிகர்களின் எந்த பிரச்னையும் தீர்க்கவில்லை என வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா தெரிவித்தார். திருவண்ணாமலையில் நேற்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஆட்சியாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுப்பதற்காக, தமிழகம் முழுவதும் சென்று வணிகர்களை சந்தித்து வருகிறோம். இந்த தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக வணிகர்களின் வாக்கு வங்கியை உருவாக்கி வருகிறோம். எங்களுடைய ேகாரிக்கைளை நிறைவேற்றும் அரசை ஆட்சியில் அமர வைக்கும் அளவில், ஒரு சொல் மந்திரமாக வணிகர்களின் குரல் இந்த தேர்தலில் ஒலிக்கும்.வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்கிற, ேதர்தல் அறிக்கையில் வெளியிடுகிற கட்சிக்கு எங்களுடைய ஆதரவு இருக்கும். இதுதொடர்பாக, வணிகர் பேரமைப்பின் ஆட்சி மன்ற கூட்டம் விரைவில் கூடி யாருக்கு ஆதரவு என்பதை அறிவிக்க இருக்கிறோம்.தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி, சாலை விரிவாக்கம் எனும் பெயரில் பல கட்டிடங்கள் இடிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாகியும் அவற்றை கட்டிக்கொடுக்கவில்லை. திருவண்ணாமலை ரயில்வே பாலம் கட்டுமானம் தாமதமாகிறது. இதனால், வியாபாரிகள் பாதித்துள்ளனர்.

ஜிஎஸ்டி வரி வருவாய் மூலம் ₹1.20 லட்சம் கோடியை வணிகர்கள் பெற்றுத்தருகிறோம். ஆனால், எங்களுடைய கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. கொரோனா தொற்று பேரிடர் காலத்தில், 6 மாதம் வட்டி செலுத்துவதை தள்ளி வைக்க வேண்டும் என்றோம். அதையும் செய்யவில்லை. மேலும், சிறு வியாபாரிகளுக்கு ₹1 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை ஒரு ஆண்டுக்கு வட்டியில்லாத கடன் வழங்க வேண்டும் என அரசிடம் கேட்டோம். ஆனால், மத்திய, மாநில அரசுகள் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக வணிகர்களின் எந்த பிரச்னையையும் அரசு தீர்க்கவில்லை. கடலை எண்ணெய் ஒரு மாதத்தில் ஒரு லிட்டருக்கு ₹40 உயர்ந்திருக்கிறது. ஒரு லிட்டர் ₹60க்கு விற்ற பாமாயில் கடந்த ஒரு ஆண்டில் ₹140ஆக உயர்ந்திருக்கிறது. விலைவாசி உயர்வுக்கு வணிகர்கள் பொறுப்பல்ல. அரசுதான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.காஸ் சிலிண்டர் விலை ஒரு மாதத்தில் 3 முறை ஏற்றியுள்ளனர். ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலையையும் கொண்டுவர வேண்டும். தேர்தல் அறிவிக்கப்பட்டதால், போராட்டத்தை நடத்த முடியாத நிலை உள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் வியாபாரிகளுக்கு கொடுக்கும் நெருக்கடியை தடுக்க, தேர்தல் ஆணையத்தை நேரில் சந்திக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது, சங்கத்தின் மாவட்ட தலைவர் மண்ணுலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...