கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் குடிநீர் அபிவிருத்தி திட்டம் குடிநீர் விநியோகம் குறித்து மாநகராட்சி கமிஷனர் தீவிர ஆய்வு

கோவை, மார்ச் 4: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் ஆகிய பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்த ரூ.108.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதி மூலமாக ரூ.61.80 கோடி கடனாகவும், ரூ.30.90 கோடி தமிழக அரசு   மானியமாகவும் மற்றும் கோவை மாநகராட்சி பங்களிப்புத் தொகையாக ரூ.15.46 கோடியும் ஒதுக்கப்பட்டு இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக ராமகிருஷ்ணாபுரத்திலுள்ள 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள சமநிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து 6.52 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுகிறது. அதனை ஜெய் நகரில் உள்ள 10 லட்சம் லிட்டர் தரைமட்ட தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து நீர் இறைப்பான் மூலம் உந்தப்பட்டு, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தரைமட்ட தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக குடிநீர் எடுக்கப்பட்டு கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் பகுதிகளுக்கு என புதியதாக கட்டப்பட்டுள்ள 12 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும், ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள 19 மேல்நிலைத் தொட்டிகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படும்.

அதிலிருந்து 26 ஆயிரத்து 659 வீட்டு இணைப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இப்பணிகள் கடந்த 2016 துவங்கப்பட்டு தற்போது 100 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இதனிடையே கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் அபிவிருத்தி செயல்பாடுகளை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அப்பகுதி மக்களிடம் குடிநீர் சீராக விநியோகிக்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் சரவணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: