81 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வந்தது

கோவை, மார்ச்  4: கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதியில் இருந்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சுகாதாரப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்களை தொடர்ந்து தற்போது பொது மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தடுப்பூசி மையங்களில் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 25 அரசு மருத்துவமனைகள், 79 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. கோவை மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 83 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 13 ஆயிரத்து 700 கோவேக்ஸின் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது மூன்றாம் கட்டமாக 77 ஆயிரத்து 300 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 4 ஆயிரத்து 400 கோவேக்ஸின் தடுப்பூசிகளும் வந்துள்ளது. கோவைக்கு இதுவரையில் மூன்று கட்டங்களாக 1 லட்சத்து 60 ஆயிரத்து 800 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 18 ஆயிரத்து 100 கோவேக்ஸின் தடுப்பூசிகள் சேர்த்து 1 லட்சத்து 78 ஆயிரத்து 900 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில், 33 ஆயிரத்து 788 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 342 கோவேக்ஸின் தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் மொத்தமுள்ள 104 மையங்களில் கோவை அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ஆகிய இரண்டு மையங்களில் கோவிஷீல்டு, கோவேக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் போடப்படுகிறது. மற்ற மையங்களில் கோவீஷீல்டு தடுப்பூசி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

விரைவில் அனைத்து மையங்களிலும் 2 தடுப்பூசிகளும் போடப்படும் எனவும், பயனாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப தடுப்பூசிகளை சேர்வு செய்துகொள்ளலாம் எனவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், “கோவை மண்டலத்திற்கு 1 லட்சத்து 69 ஆயிரத்து 900 தடுப்பூசிகள் வந்துள்ளது. இதில், கோவைக்கு 81 ஆயிரத்து 700 தடுப்பூசிகள், ஈரோட்டிற்கு 36 ஆயிரத்து 400 தடுப்பூசிகள், திருப்பூருக்கு 33 ஆயிரத்து 500 தடுப்பூசிகள், நீலகிரிக்கு 18 ஆயிரத்து 300 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களை தொடர்ந்து தற்போது பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதால் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்றனர்.

Related Stories:

>