சென்னை: 3 நாளாக குறைந்து வந்த நிலையில், தங்கம் விலை நேற்று திடீரென பவுனுக்கு ரூ.800 உயர்ந்தது. அதேபோல வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரித்தது. தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஓரிரு நாட்கள் விலை ஏறுவதும், பின்னர் சரிவதுமான நிலையும் இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை கடந்த 26ம் தேதி முதல் குறைந்து வந்தது. 26ம் தேதி அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 17,840க்கும், 27ம் தேதி பவுனுக்கு ரூ.640 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 17200க்கும் விற்கப்பட்டது.
தொடர்ந்து, நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 650க்கும், பவுனுக்கு ரூ.1200 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 17,200க்கும் விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை தொடர்ந்து 3 நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.2240 குறைந்தது. இந்த விலை குறைவு என்பது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்து இருந்தது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் கடந்த 2 நாளாக கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் வரை சரிந்தது.
இந்நிலையில் நேற்று தங்கம் விலை திடீரென உயர்ந்தது. அதாவது, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,600க்கும், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 16,800க்கும் விற்க்கப்பட்டது. அதே நேரத்தில் நேற்று வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.290க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.90 லட்சத்துக்கும் விற்பனையானது. தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிகரித்து இருப்பது நகை வாங்குவோருக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
