தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 88,900 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை கட்டாயம்

வேலூர், மார்ச் 4: தமிழகத்தில் 88,900 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் தெர்மல் ஸ்கேனர் கட்டாயம் வைத்து பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் இருந்தால் கடைசி ஒரு மணி நேரம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாக சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பிப்ரவரி 26ம் தேதி அமலுக்கு வந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடாவை தவிர்க்க பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதேபோல் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களிலும் கணக்கெடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இம்முறை கொரோனா பாதிப்பு முழுவதும் தடுக்க முடியாத நிலையில், இத்தேர்தல் நடைபெறுவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையும் தேர்தலில் முக்கியமான ஒன்றாக உள்ளது.

எனவே தமிழகத்தில் உள்ள 88,900 வாக்குச்சாவடி மையங்களில் தெர்மல் ஸ்கேனர் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். வாக்களிக்க வரும் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் தெர்மல் ஸ்கேன் செய்து, வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்தால், அவர்களை கடைசி ஒரு மணி நேரத்தில் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வழக்கமாக வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரையும் வழக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களிலும் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்கான தெர்மல் ஸ்கேனர் கருவிகளை அதிகாரிகள் தற்போது தயார் படுத்தி வைத்துள்ளனர்.

Related Stories:

>