கூடுதல் வாக்குசாவடி மையங்களில் அடிப்படை வசதி இல்லை

ஈரோடு, மார்ச் 4: கூடுதல் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால், அதிகாரிகள் திணறி வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சட்டமன்ற தேர்தலில் கூடுதல் வாக்குசாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 926 இடங்களில் 2215 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகளை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதையடுத்து கூடுதலாக 526 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மொத்த வாக்குசாவடிகளின் எண்ணிக்கை 2,741 ஆக உயர்ந்துள்ளது. கூடுதல் மையங்கள் தற்போது, உள்ள வாக்குசாவடி மையத்திலேயே அமைக்கப்பட்டுள்ள போதிலும், கூடுதல் வாக்குசாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டி உள்ளதால், அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதில், குறிப்பாக மின்விசிறிகள், விளக்குகள், குடிநீா், கழிப்பறை, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வந்து செல்ல சாய்வு தளம், தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் தங்குவதற்கான இடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

முதல்கட்டமாக கூடுதல் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதி செய்து கொடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டு ஓராண்டாகிவிட்ட நிலையில், பள்ளி வளாகங்கள் முழுவதும் குப்பைகள் நிறைந்தும், புல், செடிகள் வளர்ந்தும் காடு போல காட்சியளிப்பதால், அதை சுத்தம் செய்யும் பணிகளில் உள்ளாட்சி துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: ‘கூடுதல் வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது.

குறிப்பாக தொடக்கப்பள்ளிகளில் மின்வசதி, குடிநீர், கழிப்பறை வசதிகள் மிகவும் குறைவு. தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக பணிகளுக்கு டெண்டர் எதுவும் விடமுடியாத சூழலில், மிகுந்த சிரமங்களுக்கு இடையே பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு கூறினர்.

Related Stories: