சத்தியமங்கலம் அருகே நாட்டு துப்பாக்கி, மான்கறி வைத்திருந்த 4 பேர் கைது

சத்தியமங்கலம்,  மார்ச் 4: சத்தியமங்கலம் அருகே நாட்டு துப்பாக்கி மற்றும் மான்கறி வைத்திருந்த 4 பேரை நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகள்  வைத்துள்ளதாகவும், வனப்பகுதியில் மான் வேட்டையாடுவதாகவும் ஈரோடு மாவட்ட நக்சல்  தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நக்சல்  தடுப்பு பிரிவு தலைமை காவலர் சுப்பிரமணியம் தலைமையில் போலீசார்  புளியங்கோம்பை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த மாரிச்சாமி (26), பெரியசாமி (55) ஆகிய 2 பேர் தங்களது வீடுகளில் 2 நாட்டு துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, நக்சல் தடுப்பு  பிரிவு போலீசார் 2 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

சத்தியமங்கலம் அடுத்துள்ள சிக்கரசம்பாளையம் அருகே பீக்கிரிபாளையம்  கிராமத்தில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணி மேற்கொண்டபோது,  அப்பகுதியை சேர்ந்த மாரி (எ) மீசை மாரி (45), திப்பன் (50) ஆகிய இருவரும் வனப்பகுதியில் மான் வேட்டையாடி 5 கிலோ மான் இறைச்சி  வைத்திருந்தனர். மேலும் கஞ்சா பயிரிடுவதற்காக கஞ்சா நாற்றுகள் மற்றும் சாராயம்  காய்ச்ச பயன்படுத்துவதற்காக வைத்திருந்த டிரம், வனவிலங்குகளை வேட்டையாட  பயன்படுத்தப்படும் 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் சுருக்குவலை கம்பி  ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் மற்றும் மான் வேட்டையாடிய இருவர் என மொத்தம் 4 பேரை  சத்தியமங்கலம் போலீசில் நக்சல் தடுப்பு  பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து சத்தியமங்கலம்  போலீசார் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>