5 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சள் விலை கிடுகிடு உயர்வு

ஈரோடு,  மார்ச் 4:  ஈரோட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சள் விலை கிடுகிடுவென  உயர்ந்து, ஒரு குவிண்டாலின் விலை ரூ.10 ஆயிரத்தை கடந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மஞ்சள் இந்திய அளவில் மட்டும் அல்லாது  உலக அளவில் தனித்துவம் உள்ளதால், புவிசார் குறியீடும் வழங்கப்பட்டு உள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன் கோட்டை  போன்ற பாசன பகுதிகளில் மஞ்சள் பயிர் பல ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி  செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் அவர்கள் விளைவிக்கும் மஞ்சளை  மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள்,  சொசைட்டிகளிலும் ஏலம் மூலம் விற்பனை செய்வர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு  மேலாக மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால், பெரும்பாலான விவசாயிகள்  தங்களது மஞ்சளை விற்பனை செய்யாமல், குடோன்களில் இருப்பு வைத்து, விலை  உயரும்போது விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், தற்போது புதிய மஞ்சள்  வரத்தும் அதிகரித்துள்ளதால், கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டு  துவக்கத்தில் இருந்தே மஞ்சளின் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.  தற்போது, மஞ்சளின் நுகர்வும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக  மஞ்சளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து, நேற்று நடந்த ஏலத்தில்  மஞ்சளின் விலை ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரத்தை கடந்து விற்பனையானதால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: ஈரோடு  மஞ்சள் மார்க்கெட்டில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குவிண்டால்  மஞ்சள் விலை ரூ.10 ஆயிரத்தை கடந்து விற்பனையாகியுள்ளது. தற்போது, தர்மபுரி  பகுதி புதுமஞ்சள் வரத்து தொடங்கி உள்ளது. வெளி மாநிலங்களில் உள்ள பஸ்மத்  மற்றும் நாந்தேட் மார்க்கெட்டுகளுக்கு புதுமஞ்சள் வரத்து குறைவாக உள்ளதால்,  விலையும் உயர்ந்து வருகிறது. எனவே, புதுமஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.10  ஆயிரத்து 400 வரையும், பழைய மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரம் என்ற  விலையில் விற்பனையாகி வருவதால், மஞ்சள் விவசாயிகளும், வியாபாரிகளும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>