தப்பியோடிய விசாரணை கைதியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

திருச்சி, மார்ச் 4: திருச்சியில் தப்பியோடிய விசாரணை கைதியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கழிவறை செல்வதாக கூறி சென்ற திண்டுக்கல் விசாரணை கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வேல்வில்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா(எ)தாலிப்ராஜா(37). 2018ல் குற்ற வழக்கில் தொடர்புடைய இவரை திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இதில் தாலிப்ராஜாவிற்கு நீதிமன்ற காவல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக திண்டுக்கல் வடக்கு போலீஸ் சார்பில் போலீஸ்காரர் தேவராஜ் மற்றும் பெண் காவலர் கங்காதேவி ஆகியோர் நேற்று முன்தினம் மத்திய சிறைக்கு வந்தனர்.

தகுந்த ஆவணங்களை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து தாலிப்ராஜாவை திண்டுக்கல் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். ஜெயில் கார்னரில் இருந்து டவுன் பஸ்சில் புறப்பட்ட தாலிப்ராஜா மற்றும் 2 போலீசார், மத்திய பஸ் நிலையத்திற்கு மதியம் 12.30 மணியளவில் வந்தடைந்தனர். அப்போது கழிவறை செல்ல வேண்டும் என ராஜா கூறியதையடுத்து அழைத்து சென்று பின் அழைத்து வந்தனர். இரு போலீசாரும் முன்னே செல்ல, பின்னே தாலிப்ராஜா வந்துகொண்டிருக்க அப்போது ஒரு பஸ் குறுக்கே வர, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு தாலிப்ராஜா தப்பியோடிவிட்டார். இது குறித்து தேவராஜ் கன்டோன்மென்ட் போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் தலைமையில் தனிப்படை போலீசார் தாலிப்ராஜாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: