தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் ஆய்வு

தூத்துக்குடி, மார்ச் 4: தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து பயன்படுத்தும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். தூத்துக்குடி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முடிவினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட தூத்துக்குடி, வைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் தூத்துக்குடி தமிழ்நாடு சேமிப்பு கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் வாக்குப்பதிவு  இயந்திரங்களை வெளியில் எடுத்து பயன்படுத்திடும் பணி நேற்று துவங்கப்பட்டது.

முன்னதாக மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சீல் செய்யப்பட்ட குடோன் நேற்று திறக்கப்பட்டது. குடோனில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட்கள் வெளியில் எடுத்து பயன்படுத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், சப்-கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன், தாசில்தார் ஜஸ்டின் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

   கோவில்பட்டி : தூத்துக்குடி மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மக்களவை தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதால் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அதன்படி பாதுகாப்பு அறையில் உள்ள விவிபேட் இயந்திரத்தை எடுத்து, அதில் பதிவாகி இருந்த சின்னங்களை அழிக்கும் பணி நடந்தது.

கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன் முன்னிலையில் பாதுகாப்பு அறை கதவுகள் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்பாக சீல் அகற்றப்பட்டு திறக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்த விவிபேட் இயந்திரங்களில் உள்ள சின்னங்கள் பதிவாகி இருந்த சீட்டுகளை தனியே வெளியே எடுத்து அழித்திடும் பணிகள் நடந்தது. இந்த பணிகள் வட்டாட்சியர் அமுதா, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர்கள் சுரேஷ், ராமகிருஷ்ணன், சண்முகவேல்  மேற்பார்வையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மேற்கொண்டனர்.

Related Stories: