சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகள் கலெக்டர்கள் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி தேசிய நெடுஞ்சாலை, சர்வம்பாக்கம் கூட்ரோடு, சித்தாமூரில் தேர்தல் பறக்கும் படையினரால் மேற்கொள்ளப்படும் வாகன பரிசோதனையை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ஜான்லூயிஸ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, தேர்தல் அலுவலர்களுக்கு, வாகனங்களை முழுமையாக சோதனையிட வேண்டும். அந்த நேரத்தில் கேமராக்கள் மூலம் முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து, மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படட் மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டார்.

அப்போது, அலுவலர்களுக்கு ஏற்படும் தேர்தல் பணி குறித்த சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் வழங்கிடுமாறு பயிற்சி அளிக்கும் அலுவலர்களை கேட்டு கொண்டார். மேலும், மதுராந்தகம் வட்டம் மாம்பாக்கம் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் குருங்குளம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்படும் வாக்குச்சாவடி மையங்கள், செய்யூர் வட்டம், செய்யூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்படும் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தார். அப்போது, வாக்குச்சாவடி மையத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா, மாற்றுத் தினாளிகளுக்கு தேவையான பாதை வசதிகள், சக்கர நாற்காலிகள் இருப்பு உள்ளதா என பார்வையிட்டார்.

பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கும் பாதுகாப்பு இரும்பு அறையை (ஸ்டாரங் ரூம்) பார்வையிட்டார். அவருடன், மாவட்ட துணை தேர்தல் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், மதுராந்தம் ஆர்டிஓ லட்சுமிபிரியா உள்பட அதிகாரிகள் இருந்தனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் 21 தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள், பறக்கும் படைகள், காவல்துறை அலுவலர்கள் ஆகியோருடன் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நட்ந்தது. இதை தொடர்ந்து காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட இலுப்பப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம், தாமல் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு நடத்தினார். அப்போது, காஞ்சிபுரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நிர்மலா உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories:

>