தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் கடைகள் இரவு 8 மணிக்கு அடைப்பு பணியாளர் சங்கம் கோரிக்கை

தூத்துக்குடி, மார்ச் 4: தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் பாலுச்சாமி, பொதுச்செயலாளர் ராஜா உள்ளிட்டோர் தமிழக தலைமை தேர்தல் ஆணையர், அரசு முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:  தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப். 6ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் தினமும் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணியுடன் முடிவடைகிறது. அதன் பின்பு விற்பனை கணக்கை சரிசெய்து முடிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபடுவார்கள். தற்போது தேர்தல் பிரசாரம் இரவு 10 மணிக்கு முடிந்தவுடன் அனைவரும் ஒரே நேரத்தில் டாஸ்மாக் கடைக்கு வரும் நிலை இருப்பதால் கடையின் விற்பனை கணக்கை இறுதி செய்யும் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கும், அரசியல் கட்சிகளின் களப்பணியாளர்களுக்கும் இடையே பிரச்னைகள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது.

 எனவே, இவற்றைத் தவிர்த்திட தேர்தல் முடியும்வரை டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை 2 மணி நேரத்தை குறைத்து இரவு 8 மணிக்கு கடைகளை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே புதுச்சேரியில் தேர்தலை முன்னிட்டு மதுபானக் கடைகளில் விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.  

Related Stories: